ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தேன் இன்றும் கெட்டுப்போகாமல் இருக்குமா? கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? உலகின் மிகப் பழமையான இயற்கை உணவுப் பொருட்களில் ஒன்றான தேன், நீண்ட காலம் கெடாமல் இருப்பதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான அறிவியல் ரகசியம் இருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
தேனில் 18% மட்டுமே நீர் உள்ளதால், பாக்டீரியாக்களின் நீர்ச்சத்தை உறிஞ்சி அவற்றை அழித்துவிடும். அமிலத்தன்மை: இதன் pH அளவு (3.2–4.5) கிருமிகள் வளர முடியாத சூழலை உருவாக்குகிறது. தேனீக்களின் நொதிகள் உருவாக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு நுண்ணுயிரிகளைத் தடுக்கிறது. ஆக்ஸிஜன் உள்ளே புக முடியாத அடர்த்தியான அமைப்பு இருக்கிறது. தேன் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்டது. காற்று புகாத பாத்திரத்தில் மூடி வைத்தால், வெளிப்புற ஈரப்பதம் உள்ளே செல்லாமல் தேன் பல ஆயிரம் ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.
2003-ஆம் ஆண்டு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில், சுமார் 5,500 ஆண்டுகள் பழமையான மட்பாண்டங்களில் தேன் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. எகிப்தியப் பிரமிடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தேன் ஜாடிகள் கண்டறியப்பட்டுள்ளன. சுத்தமான தேன் காலப்போக்கில் கெட்டிப்பட்டுப் படிகமாக மாறலாமே தவிர, ஒருபோதும் விஷமாகவோ அல்லது கெட்டுப்போகவோ செய்யாது என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்ணும் அளவிற்கு பாதுகாப்பானதா என்று இன்னும் உறுதி செய்யவில்லை.
தேன் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான ரகசியம், தேனீக்களின் தேன் தயாரிக்கும் செயல்முறையில் அடங்கியுள்ளது.
தேடல் தேனீக்கள் பூக்களிலிருந்து இனிப்பான தேனைச் சேகரித்து, அதைத் தேன்கூட்டிற்குக் கொண்டு செல்கின்றன. அங்கே, தேனீக்கள் அந்தத் தேனை மற்ற வேலைக்காரத் தேனீக்களுக்கு மாற்றுகின்றன. அவை அந்தத் திரவத்தை மீண்டும் மீண்டும் குடித்து, கக்கி, அதன் நீர்ச்சத்தைக் குறைக்கின்றன. இந்தச் செயல்பாட்டின்போது, தேனீக்களின் வயிற்றில் உள்ள ஒரு நொதி, தேனில் உள்ள குளுக்கோஸை குளுக்கோனிக் அமிலமாக உடைக்கிறது – இது தேனை அமிலத்தன்மை உடையதாக (pH சுமார் 4) மாற்ற உதவுகிறது – மேலும் ஹைட்ரஜன் பெராக்சைடாகவும் மாற்றுகிறது.
தேன்கூட்டில் தேன் சேர்ந்தவுடன், தேனீக்கள் தங்கள் இறக்கைகளால் அதை வேகமாக விசிறி, நீர் ஆவியாவதை விரைவுபடுத்துகின்றன. தேனின் குறைந்த நீர்ச்சத்தும் அதிக அமிலத்தன்மையுமே அது கெட்டுப்போகாமல் இருப்பதற்கான இரண்டு முக்கியக் காரணங்கள் – உணவைக் கெடுக்கும் பாக்டீரியாக்கள் இந்தச் சூழலில் செழித்து வளர முடியாது. ஹைட்ரஜன் பெராக்சைடு பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது. இதனால், குளிர்கால மாதங்களில் தேனீக்களுக்குத் தேன் புத்துணர்ச்சியுடன் இருப்பதுடன், நமது ஜாடிகளுக்குள் இன்னும் நீண்ட காலத்திற்கும் கெடாமல் இருக்கிறது.