\
Yamuna River Pollution: Health Risks for Chhath Puja Devotees
Yamuna RiverPTI

வழிபடும் ஆற்றில் விஷ நுரை? நச்சாக மாறிய யமுனை நீர்! சத் பூஜையில் காத்திருக்கும் ஆபத்து!

பக்தர்கள் புனிதமாகக் கருதி வழிபடும் ஆற்றின் நீரே மாசடைந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. அப்படி யமுனை ஆற்றில் நச்சு நுரை உருவாகக் காரணம் என்ன? நீரின் தற்போதைய நிலை என்ன?
Published on: 

இந்தியாவில் ஆண்டுதோறும்  கொண்டாடப்படும் சத் பூஜை திருவிழா நடைபெறவுள்ள நிலையில் யமுனை ஆற்றில் படர்ந்துள்ள வெள்ளை நிற நச்சு நுரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முக்கியமான புனித நதிகளில் ஒன்றாகக் கருதப்படும் யமுனை ஆறு, டெல்லி வழியாகப் பாய்கிறது. ஆனால், நகரமயமாக்கல் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுகளால் இந்த ஆறு பல ஆண்டுகளாகக் கடுமையான மாசுபாட்டைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் சில பகுதிகளில் வெள்ளை நிறத்தில் அடர்த்தியான நுரை படர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. 

Yamuna River
Yamuna RiverPTI

சோப்புக் கரைசல் பொங்குவது போல ஆற்றின் மேற்பரப்பு முழுவதும் இந்த நுரை காணப்படுகிறது. யமுனை ஆற்றில் இந்த நுரை உருவாவதற்கு வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் முக்கியக் காரணமாக உள்ளதாக சொல்லப்படுகிகிறது. 

குளிர்காலத்தில் ஆற்றின் நீரோட்டம் குறைவதால், கழிவுகள் அதிகமாகத் தேங்கி நுரை உருவாவது மேலும் அதிகரிக்கிறது. இதனால், ஆற்றின் நீரின் தரமும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில், சத் பூஜை கொண்டாட்டங்களுக்காக யமுனை ஆற்றங்கரையில் பக்தர்கள் திரளவுள்ள நிலையில், ஆற்றின் நீரின் தரம் குறித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நவம்பர் 13ஆம் தேதி NDTV வெளியிட்ட ஆய்வின்படி, டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவான DPCC-யின் நீர்த் தரப் பரிசோதனைத் தரவுகள் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

Yamuna River
Yamuna RiverPTI

இதில், டெல்லியில் சத் பூஜைக்காகப் பயன்படுத்தப்படும் முக்கிய வழிபாட்டுத் துறைகளில் ஒன்றுகூட குளிப்பதற்கான நீர்த் தர அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ISBT பாலம் பகுதியில் 100 மில்லி லிட்டர் நீரில் கோலிஃபார்ம்  பாக்டீரியாக்களின் அளவு 35,000 MPN ஆகப் பதிவாகியுள்ளது. ஆனால், குளிப்பதற்கான அனுமதிக்கப்பட்ட அளவு 2,500 MPN மட்டுமே. அதேபோல், ITO பகுதியில் 17,000 MPN ஆகவும், ஓக்லா தடுப்பணைப் பகுதியில் 23,000 MPN ஆகவும் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு பதிவாகியுள்ளது. 

இதன் மூலம், வழிபாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் ஆற்றின் நீர் எந்த அளவுக்கு மாசடைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இந்த நீரில் பக்தர்கள் இறங்குவதால் தோல் அரிப்பு, தடிப்புகள் போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதேபோல் இந்த நீரைக் குடித்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, கழிவுநீரில் காணப்படும் நோய்க்கிருமிகளால் டைபாய்டு, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கின்றனர். 

ஒருபுறம், யமுனை ஆற்றை புனிதமாகக் கருதி பக்தர்கள் வழிபட்டு வரும் நிலையில், மறுபுறம் அதே ஆறு கழிவுநீராலும் ரசாயனங்களாலும் மாசடைந்து வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Yamuna River Pollution: Health Risks for Chhath Puja Devotees
2002 குஜராத் கலவரம்!! நாட்டை உலுக்கிய பில்கிஸ் பானு வழக்கு.. 2 பேருக்கு ஆயுள் நிறுத்தி வைப்பு!!