எல் நினோ Reuters
சுற்றுச்சூழல்

எல் நினோ எதிரொலி! இந்தியாவுக்கு 'WHO' விடுத்த எச்சரிக்கை.. என்ன ஆபத்து?

எல் நினோ-வால் உலகளவில் மிகப்பெரிய சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஒருமுறை எச்சரித்திருக்கும் நிலையில், அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இதுகுறித்துப் பார்க்கலாம்.

Premkumar S

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் இயற்கையான காலநிலை நிகழ்வாகும். இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகள் மாறுகின்றன. சில பகுதிகளில் கடுமையான வறட்சியும், சில இடங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம்.

el nino

அந்தவகையில் தான், இந்த வருடம் நிலவிய கடுமையான எல் நினோவால் இந்தியாவில் தென்கிழக்கு பருவமழை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தோனோசியாவில் அதிக அளவிலான காட்டுத்தீ-க்களை சந்தித்திருப்பதுடன், ஐரோப்பாவில் கடும் வெப்பம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச்சூழலில் தான், எல் நினோவால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகளும் உருவாகும் அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக, உலக சுகாதார நிறுவனம் தனது அவசரகால நடவடிக்கையை 'கிரேடு 3' என்ற மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. 2026 அக்டோபர் முதல் 2027 செப்டம்பர் வரை இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, அதிக வெப்பநிலை, தண்ணீர் பற்றாக்குறை, டெங்கு, மலேரியா, லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

WHO

குறிப்பாக, தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் வீடுகளில் தண்ணீரைச் சேமித்து வைக்கும்போது, அவை முறையாக மூடப்படாவிட்டால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களாக மாறலாம். அதேபோல், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் குடிநீர் மாசுபடுவதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. மேலும், மழைப்பொழிவு குறைவதால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு உணவுப் பற்றாக்குறையும் ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏற்படலாம். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.

இந்தச் சூழலை எதிர்கொள்ள, நோய்களைக் கண்காணித்தல், மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைத்திருத்தல், குடிநீர் பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்டவற்றை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. மேலும், உலக சுகாதாரம் நிறுவனம் வெளியிட்ட அதிக சுகாதார பாதிப்புக்குள்ளாகும் நாடுகள் பட்டியலில், வங்கதேசம், பூட்டான், நேபாளம், இலங்கை மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு, எல் நினோ என்பது இனி வெறும் வானிலைப் பிரச்சினை மட்டுமல்ல... உலக நாடுகளின் பொது சுகாதாரத்திற்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.