wildlife  web
சுற்றுச்சூழல்

காலநிலை மாற்றம் எச்சரிக்கை.. ஆபத்தில் விலங்குகளின் வாழ்விடம்!

காலநிலை மாற்றம் காரணமாக விலங்குகளின் வாழ்விடங்கள் ஆபத்தில் இருப்பதாக இரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.

PT WEB

தொடர்ச்சியான புவி வெப்பமயமாதலின் காரணமாக, 2085-ஆம் ஆண்டுக்குள் நிலப்பரப்பில் உள்ள விலங்குகளின் வாழ்விடங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை, வெப்ப அலைகள் அல்லது காட்டுத் தீ போன்ற காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. நேச்சர் எக்காலஜி அண்ட் எவல்யூஷன் (Nature Ecology & Evolution) என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கை, வெப்ப உமிழ்வுகளை விரைவாகக் குறைப்பதன் மூலம் இந்தp பாதிப்புகளைப் பெருமளவில் தவிர்க்க முடியும் என்று கூறுகின்றன.

ஜெர்மனியில் உள்ள போட்ஸ்டாம் காலநிலை தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காலநிலை கணிப்புகளையும் காலநிலையால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களின் பட்டியலில் உள்ள தரவுகளையும் பகுப்பாய்வு செய்துள்ளனர்.

Australia wildfire

உதாரணமாக, 2019-2020 ஆஸ்திரேலிய காட்டுத்தீ குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தீ விபத்துக்கு முன்னதாக வறட்சி ஏற்பட்டிருந்தபோது, ​​27 முதல் 40 சதவீதம் வரை தாவர மற்றும் விலங்கு இனங்களின் எண்ணிக்கையில் அதிக சரிவு காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Australia wildfire

"2050-ஆம் ஆண்டளவில், தற்போதைய புவியியல் எல்லைகளுக்குள் உள்ள பகுதியில் உயிரினங்கள் சராசரியாக 74 சதவீதம் வெப்ப அலைகளுக்கும், 16 சதவீதம் காட்டுத்தீக்கும், 8 சதவீதம் வறட்சிக்கும் மற்றும் 3 சதவீதம் ஆற்று வெள்ளத்தின் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமேசான் படுகை, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட உயிரின வளம் நிறைந்த பகுதிகள் பாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் கணடறிந்துள்ளனர். 2050-ஆம் ஆண்டுகளில் 22 சூழல் மண்டலங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம், தீவிர காலநிலை நிகழ்வுகளால் பாதிக்கப்படும் என்றும், இது 2085-ஆம் ஆண்டுகளில் 236 சூழல் மண்டலங்களாக அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Elephants in the forest

"2085-ஆம் ஆண்டிற்குள், உயிரினங்களின் வாழிட எல்லைகளுக்குள் உள்ள பரப்பளவில் 36 சதவீதம், பல்வேறு காலநிலை மாற்ற நிகழ்வுகளுக்கு உள்ளாகும் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.