ஆசிரியர் தகுதித்தேர்வு தேதி மாற்றம்.. தேதி அறிவிப்பு! கோப்புப்படம்
கல்வி

ஆசிரியர் தகுதித்தேர்வு தேதி மாற்றம்.. புதிய தேதி அறிவிப்பு!

நவம்பர் 2ஆம் தேதி கல்லறை திருநாள் என்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்றி வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vaijayanthi S

ஆசிரியர் தகுதித்தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் நவம்பர் ஒன்றாம் தேதியும், இரண்டாம் தேதியும் நடைபெறவிருந்த தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டுக்கான தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் நவம்பர் 15 ஆம் தேதியும், 16 ஆம் தேதியும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிக்கை

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டு (2025) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1 மற்றும் தாள் -II) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( Website: http://www.trb.tn.gov.in ) 11.08.2025 அன்று வெளியிட்டது.

மேற்படி தேர்வுகள் 01.11.2025 மற்றும் 02.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களினால் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் 15.11.2025 அன்று தாள் I-ம் மற்றும் 16.11.2025 அன்று தாள் II-ம் நடைபெறும் எனத் திருத்திய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேதியில் ஏன் மாற்றம்?

கல்லறை திருநாள் நவம்பர் மாதம் முதல் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தேர்வை அறிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் தேதியை மாற்ற வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். தேர்வினால் கிறிஸ்துவ இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு வேறு உகந்த தேதிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

மேலும் தேர்வை எழுத விரும்புகிறவர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் செப்டம்பர் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணமாக ரூ.600 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பத் திருத்த கால அவகாசம் செப்டம்பர் 9 முதல் 11 வரை வழங்கப்பட்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.