கல்வி

''11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்தாண்டே அட்மிஷன்'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

JustinDurai
தமிழகத்தில் தொடங்கப்பட்ட 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில், 4 கல்லூரிகளில் கூடுதலாக 600 மாணவர்கள் சேர்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்து கொண்டார். அப்போது தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக 800 மாணவர்களை சேர்க்க ஒப்புதல் அளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசின் தொடர் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் வீதம், கூடுதலாக 600 மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடப்பாண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமாக 1,450 இடங்களை நிரப்புவதற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என கூறினார். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் உள்ள அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை 9,100 ஆக அதிகரித்துள்ளதாகவும், நாட்டிலேயே இந்த எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.