ASER
ASER ஃபேஸ்புக்
கல்வி

‘கிராமங்களின் 25% பதின்வயது குழந்தைகளுக்கு, 2-ம் வகுப்பு பாடங்களைக்கூட சரளமாக படிக்க தெரியவில்லை!’

ஜெனிட்டா ரோஸ்லின்

Annual Status of Education Report (ASER) 2023-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்மூலம், சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவருகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை, இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள 14 - 18 வயதுடைய பதின்ம வயதினரில் 43 சதவீத குழந்தைகள் எளிய ஆங்கில வாக்கியங்களை படிக்கத் தெரியாமலும், 25 சதவீத குழந்தைகள் 2-ஆம் வகுப்பு பாடத்தினை தங்களது தாய்மொழியில்கூட சரளமாக படிக்க தெரியாமலும் இருக்கின்றனர்”

“தற்போது கிராமப்புரங்களில் 14 - 18 வயதுடையோரில் ஆங்கிலம் படிக்கத்தெரிந்தவர்களில், சுமார் முக்கால்வாசி பேருக்கு அதாவது சரியாக 73.5% பேருக்கு அவற்றின் அர்த்தம் புரிகிறது. 2017-ல் இது 53 சதவீதம் என்றே இருந்தது. அதோடு ஒப்பிடுகையில், தற்போது அதிகமாகவே ஆங்கில அறிவு கிடைத்துள்ளது. இருப்பினும் கணிதம் சார்ந்த அறிவு குறைவாகவே உள்ளது.

கணித அறிவை பொறுத்தவரை 43.3 சதவீதம் பேருக்கு மட்டுமே மூன்று இலக்க எண்ணை ஒற்றை இலக்க எண்ணால் வகுக்கும் கணிதம் தெரிகிறது. அதாவது மூன்றாம், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் இருக்க வேண்டிய திறன் 14 முதல் 18 வயதுக்குட்பட்ட கிராமப்புற பதின்ம வயதினரிடம் மிகக் குறைவாக இருக்கிறது

இந்த கணக்கெடுப்பானது, 26 மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களில், 14-18 வயதிற்கு உட்பட்ட 34,745 பேரை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகிறது.

இதில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களில் மட்டும் 2 மாவட்டங்களிலும், மற்ற மாநிலங்கள் அனைத்திலும் தலா ஒரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவின்படி 90.5 சதவீத இளைஞர்கள் சமூக வலைதளத்தினை உபயோகிக்கின்றனர். மேலும் பெண்களைவிட ஆண்களே அதிக அளவில் சோஷியல் மீடியாக்களில் உள்ளனர்.

ஆண்: 93.4%

பெண்: 87.8%

மேலும் 90 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கிறார்கள்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் இளைஞர்களில் சுமார் பாதி பேர் மட்டுமே எவ்வாறு சமூக ஊடகங்களை பாதுகாப்பான முறையில் உபயோகிப்பது என்பதை அறிந்திருக்கின்றனர்” என்று தெரிவிக்கிறது.