gokul
gokul pt
குற்றம்

“மயங்கி கிடந்தான்..தூக்கிட்டு வந்தோம்” - நண்பனின் தாயிடம் நாடகமாடிய இளைஞர்கள்..வெளிவந்த பகீர் உண்மை!

யுவபுருஷ்

செய்தியாளர் - அன்பரசன்

சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்(22). கடந்த 2 ஆண்டுகளாக போதைக்கு அடிமையான இவர், நண்பர்களுடன் போதை ஊசிகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்போல நேற்றைய தினம் நண்பர்களுடன் சேர்ந்து தட்டாங்குளம் விளையாட்டு மைதானம் அருகே போதை ஊசியை பயன்படுத்தியுள்ளார். இதில் மயக்கம் அடைந்த கோகுலை அவருடைய நண்பர்கள் மீட்டு அவரது வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

வீட்டில் இருந்த அவரது தாயிடம், தட்டான்குளம் பொதுக்கழிவறையில் கோகுல் மயக்கமடைந்து கீழே விழுந்து கிடந்ததாகவும், தாங்கள் பார்த்து வீட்டுக்கு கூட்டி வந்ததாகவும் கூறி வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். இதற்கிடையே, கோகுல் மயக்கடைந்த நிலையிலேயே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் உடனே அவரை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, கோகுலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தகவலறிந்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலின் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் சமீப நாட்களாக போதை ஊசியால் இளைஞர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புளியந்தோப்பு பகுதியில் சதீஷ்(22) என்ற இளைஞர் போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்த சோகம் அரங்கேறியது. இதைபோல, 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சூளைப் பகுதியைச் சேர்ந்த ராகுல்(19) பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ராயபேட்டையில் உள்ள தனியார் லாட்ஜில் போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்தார். இவர்களைப் போல சமீபத்தில் மட்டும் 7 பேர் போதை ஊசிகளை பயன்படுத்தும்போது உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.