கர்நாடகா
கர்நாடகா கோப்பு படம்
குற்றம்

வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள்! நிர்வாணமாக்கி தாக்கப்பட்ட இளைஞரின் தாய்! கர்நாடகாவில் கொடூரம்

ஜெனிட்டா ரோஸ்லின்

கர்நாடகாவில் காதலித்த இளம்பெண்ணும் இளைஞரும் வீட்டை விட்டு வெளியேறவே, இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் இளைஞரின் தாயை நிர்வாணமாக்கி தாக்கிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம் ஹோசா வந்தமுரி கிரமாத்தினை சேர்ந்தவர் துண்டப்பா கட்கரி, இவருக்கு வயது 24. இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரியங்கா என்பரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரின் வீட்டிலும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பிரியங்காவின் குடும்பத்தார் அவருக்கு வேறொரு இடத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் துண்டப்பா கட்கரிவும் பிரியங்காவும் ஞாயிற்று கிழமை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனை அறிந்த பெண்ணின் வீட்டார் ஆத்திரம் அடையவே துண்டப்பா கட்கரியின் வீட்டிற்கு சென்று அவரது தாயினிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கட்கரியின் தாயினை நிர்வாணப்படுத்தி அக்கிராமச் சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். மேலும் நிவாணப்படுத்தியது மட்டுமல்லாமல் மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் அறியவே, அவ்விடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை பெலகாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் 7 பேரை கைது செய்தது காவல்துறை.

மேலும் இதனை அறிந்த கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், சம்பவம் நடந்த கிராமத்துக்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய தனது x வலைதளப்பக்கத்தில் ’இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து தெரிவித்த அவர் “பெலகாவில் ஒரு பெண்ணை நிவாணமாக்கி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய செயல் மிகவும் மனிதாபிமானமற்றது. இச்சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தினையே தலை குனிய வைத்துள்ளது. இத்தகைய அருவருக்கத்தக்க செயல்களை நம் அரசாங்கம் எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளாது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது தவறிழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.