மூவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் pt desk
குற்றம்

உசிலம்பட்டி | காவலர் கொலை வழக்கு – கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

உசிலம்பட்டியில் காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார், உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: பிரேம்குமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற காவலரை கடந்த 27ஆம் தேதி கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில், காவலருடன் இருந்த ராஜாராம் என்பவர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து காவலர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியை துரிதப்படுத்திய போலீசார், நேற்று (29 ஆம் தேதி) தேனியில் வைத்து பொன்வண்ணன் என்பவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து படுகாயமடைந்த பொன்வண்ணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவருடன் கைது செய்யப்பட்ட தேனியைச் சேர்ந்த பாஸ்கரன், பிரபாகரன், சிவனேஷ்வரன் ஆகிய மூவரையும் இன்று உசிலம்பட்டி நடுவர் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மூவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.