gold theft
gold theft file image
குற்றம்

தருமபுரி: மூதாட்டியிடம் ஆப்பிள் கொடுத்து 40 சவரன் நகையை திருடிய பெண்.. போலீஸார் விசாரணை!

PT WEB

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர் சிவசேகர். இவரது மனைவி ஜெயந்தியும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 26ம் தேதி கணவன், மனைவி இருவரும் அவரவர் பணிக்கு சென்றிருந்தபோது, சிவசேகரின் வயதான தாயார் பெருமா மற்றும் இவருடைய உறவினரொருவர் (அவரும் முதியவர்) வீட்டில் இருந்துள்ளனர்.

அப்பொழுது கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். ஆசிரியரின் தாயார் பெருமாவிடம், உங்கள் மருமகள் ஜெயந்தியினுடைய தோழி என்றும் தெரிவித்துள்ளார். அப்பொழுது அவர்களிடம் நலம் விசாரித்து பேசத்தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து, அங்கிருந்த உறவுக்கார முதியவர், தனக்கு தருமபுரியில் வேலை இருப்பதாக தெரிவித்து சென்றுள்ளார். இதை கண்காணிக்க அந்த பெண்னும் பின்தொடர்ந்துள்ளார். முதியவர் பேருந்தில் ஏறியதை தொடர்ந்து, தனியாக இருந்த மூதாட்டியிடம் ஆப்பிள் பழங்களுடன் வீட்டிற்குள் சென்றுள்ளார் வந்திருந்த பெண்.

அப்போது, முதியவர் சீட்டு ஒன்றை வீட்டிலேயே விட்டுச்சென்றதாகவும், அதனை எடுத்து வர தன்னை அனுப்பி வைத்துள்ளார் என்றும் மூதாட்டியிடம் கூறியுள்ளார். இதற்கு, எந்த சீட்டு என்று தெரியவில்லையே என்ற மூதாட்டி, தன்னுடைய ரூமில் சென்று எந்த சீட்டு என்று பார்க்குமாறு கூறியுள்ளார். சூழலை லாவகமாக பயன்படுத்திக்கொண்ட பெண், கொண்டு வந்த ஆப்பிளை துண்டுதுண்டாக மூதாட்டியிடம் வெட்டிக்கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட மூதாட்டியும் சில நிமிடங்களில் சுயநினைவை இழந்துள்ளார்.

தொடர்ந்து, தான் திட்டமிட்டபடி திருட்டில் ஈடுபட தொடங்கியுள்ளார் அடையாளம் தெரியாத பெண். பீரோவில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 40 சவரன் தங்க நகைகளை எடுத்து கொண்டு காரில் ஏறி மாயமாகியுள்ளார்.

இதுதொடர்பான காட்சிகள் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை தேடி வருகின்றனர்.