7 பேர் கைது pt desk
குற்றம்

திருவாரூர் | வாங்கிய கடனுக்காக ஆசிரியரை காரில் கடத்தி மிரட்டிய கும்பல் - 7 பேர் கைது

கடன் தொகைக்காக ஆசிரியரை காரில் கடத்தி மிரட்டி அவரது மனைவியிடம் இடத்தை எழுதி வாங்கிய கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது.

PT WEB

செய்தியாளர்: விஜயகுமார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட சர்ச் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (39). இவர், தஞ்சாவூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணன் என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து ஒரு வருடத்தில் ரூ. 11 லட்சத்தை ரொக்கமாக திரும்பிக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் மீதமுள்ள 4 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பித் தர வேண்டும் என பாலகிருஷ்ணன் தொடர்ந்து திருமுருகனிடம் கேட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த 26 ஆம் தேதி அதிகாலை ஆசிரியர் திருமுருகனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல் அவரை காரில் கடத்திச் சென்று நீடாமங்கலம் பகுதியில் மறைத்து வைத்து அடித்து துன்புறுத்தியதுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

இதையடுத்து திருமுருகனை மிரட்டிய அவர்கள், அவரது மனைவி உஷா, பெயரில் உள்ள 2 கிரவுண்ட் இடத்தை பாலகிருஷ்ணன் பெயருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார். இருப்பினும் திருமுருகனை விடுவிக்காமல் அந்த கும்பல் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் கேட்டு அவரை துன்புறுத்தி உள்ளனர். இதனையடுத்து உஷா, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் தனது கணவரை மீட்டுத் தர வேண்டுமென புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், பூவனூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜ்குமார் என்பவரது மனைவி ராஜகுமாரி, சேரன்குளம் பகுதியைச் சேர்ந்த சச்சின், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரோகிணி, மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த உமா சங்கர், கார்த்தி, பிரகதீஸ் என 7 ஏழு பேரை கைது செய்த காவல்துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.