திண்டுக்கலில் பெண் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள நந்தவனப்பட்டியில் கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக ஐந்தாவது குற்றவாளியான நிர்மலாதேவி (வயது 60) கடந்த 22ம் தேதி திண்டுக்கல் அடுத்துள்ள ஈபி காலனியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு சின்னாளபட்டி அருகே வெளியூருக்கு தப்பிச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த செம்பட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அய்யனார் (21), தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் திண்டுக்கல் அடுத்துள்ள கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த பெ.நடராஜன் (45), செம்பட்டி சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த பூபாலன் (21) ஆகிய 3 பேரை தாடிக்கொம்பு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் இன்று காலை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் மேஜிஸ்ட்ரேட் கார்த்திக் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.