செய்தியாளர்: ராஜன்
தூத்துக்குடி, லூர்தம்மாள் புரத்தில் மீராசா என்பவருக்குச் சொந்தமான குடோனில் சட்டவிரோதமான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் மதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் மீராசாவுக்குச் சொந்தமான குடோனை ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு பட்டினமருதூர் பகுதியைச் சேர்ந்த மொய்தீன் (40) மற்றும் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த திலீப் (25) ஆகியோர் இருந்தனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, அங்கு இந்திய அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் 2000 லிட்டர் டீசல் ஆகியவை இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து உடனடியாக கடல் அட்டையை பறிமுதல் செய்த போலீசார், மொய்தீன் மற்றும் திலீப் ஆகிய இருவரையும் கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், மானிய விலை டீசலை உணவு பாதுகாப்புக் குழு காவல் துறையிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், குடோனின் உரிமையாளர் மீராசா மீது ஏற்கனவே பல்வேறு கடல் அட்டை கடத்தல் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.