நீலகிரி | விளைச்சல் இருந்து விலை இல்லை – கால்நடைகளுக்கு தீவனமாகும் தக்காளி... விவசாயிகள் வேதனை
செய்தியாளர்: மகேஷ்வரன்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடி பகுதியில் உள்ள விவசாயிகள் தக்காளி விவசாயம் செய்து வருகிறார்கள். இந்தாண்டு நல்ல முறையில் விளைச்சல் கிடைத்த போதும், விலை வெகுவாக குறைந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கிலோவிற்கு 8 ரூபாய்க்கு கீழ் கிடைப்பதால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கூடலூரில் காய்கறி சந்தைகள் இல்லாத நிலையில், அறுவடை செய்யக்கூடிய தக்காளியை ஊட்டியில் உள்ள சந்தைகளுக்கு தான் அனுப்ப வேண்டி இருக்கிறது. தற்போது கிடைக்கக்கூடிய விலையில் அறுவடை கூலி, ஊட்டி சந்தைக்கு கொண்டு செல்வதற்கான செலவு உள்ளிட்டவற்றை ஒப்பிட்டால் நஷ்ட மட்டுமே மிஞ்சுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்நிலையில், வேறு வழியின்றி தாங்கள் அறுவடை செய்ய கூடிய தக்காளியை தங்களது கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கி வருகின்றனர். விளைச்சல் இருந்து விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.