மத்திய கூட்டுறவு வங்கி, திருவண்ணாமலை pt web
குற்றம்

தி.மலை | கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி.. பிடிபட்ட ’பலே’ வங்கி மேலாளர்.. மோசடி நடந்த விதம் எப்படி ?

திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து 3 கோடி மோசடி செய்த புகாரில், வங்கி பெண் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி நடந்த விதம் எப்படி? என போலீசார் விசாரணை.

PT WEB

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பைபாஸ் சாலை, காந்திநகர் 3-வது தெருவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கியில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் கணக்கினை தொடங்கி நகைகளை அடகு வைத்துக் கொண்டு வருகின்றனர். அந்தவகையில் திருவண்ணாமலை, மங்கலம் அடுத்த கருமாரபட்டி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ், அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை இருவரும் கடந்த ஆண்டு கவரிங் நகைகளை வங்கியில் வைத்து பணம் பெற்றுள்ளனர்.

ராமதாஸ், ஏழுமலை இருவரும், வங்கி மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர்களிடம் ரகசியமாக பேசி, 20-க்கும் மேற்பட்டவர்கள் மூலம் கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்து சுமார் 3 கோடி ரூபாய் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டு கூட்டுறவு வங்கியின் தணிக்கை பிரிவு அதிகாரிகள் காந்திநகர் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகைகளை ஆய்வு செய்தனர், அப்போது ராமதாஸ் மற்றும் ஏழுமலை உள்ளிட்ட 23 பேர் பெயரில் கவரிங் நகைகளை வைத்து மூன்று கோடி அளவில் மோசடி செய்துள்ளது தெரிவந்துள்ளது.

பிறகு, இதற்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன் மற்றும் வங்கி பணியாளர் உடந்தையாக இருந்ததை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி பாலநாகதேவி உத்தரவின்படி, திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை குழுவினர் விசாரணை நடத்தினர்.

மோசாடியில் ஈடுபட்டவர்கள்

இந்த விசாரணையில் கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்து சுமார் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன், ஏஜெண்டாக செயல்பட்ட ஏழுமலை ஆகிய மூன்று பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து 3 பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், மத்திய கூட்டுறவு வங்கியில் கவரின் நகைகளை வைக்க முகவராக செயல்பட்ட கருமாரப்பட்டி ராமதாஸ் மற்றும் கவரிங் நகைகளை வைத்து பணம் பெற்ற 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, கவரிங் நகைகளை வைத்து கடன் பெற உறுதுணையாக இருந்த அலுவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.