செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
திருவள்ளூர் பகுதியில் இருந்து சிகப்பு நிற சொகுசு காரில் சிலர் யானை தந்தத்தை கடத்திச் செல்வதாக சென்னை வனவிலங்குகள் குற்ற கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் திருவள்ளுர் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், அவ்வழியாக வந்த வாகனத்தை வனத்துறையினர் மறித்துள்ளனர். ஆனால், கார் நிற்காமல் திருநின்றவூர் நோக்கி அதிவேகமாக சென்றுள்ளது,
இதையடுத்து அந்த வாகனத்தை பின் தொடர்ந்த வனத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். திருநின்றவூர் அருகே வனத்துறை அதிகாரிகள் தங்களை பின் தொடர்ந்து வருவதை தெரிந்தது கொண்ட கடத்தல் காரர்கள் காரை வேகமாக இயக்கியுள்ளனர்.
அப்போது சாலையில் சென்ற சிலர் மீது கடத்தல் காரர்களின் கார் இடித்து தள்ளியுள்ளது. இதில் முதியவர் ஒருவர் லேசான காயம் அடைந்துள்ளனர். கடத்தல் காரர்களின் கார் திருநின்றவூர் கோமதிபுரம் அரசுப் பள்ளி அருகே வந்த போது குறுகலான சாலையில் காரை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்த வனவிலங்கு குற்ற கட்டுப்பாடு அதிகாரிகள் காரை பறிமுதல் செய்து அதிலிருந்த தந்தத்தை மீட்டுள்ளனர்.
இந்த நிலையில், தப்பியோடிய கடத்தல் காரர்களில் ஒருவனை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர், காஞ்சிபுரம் ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பதும் தெரியவந்துள்ளது. உதயகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தந்தத்தின் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பரபரப்பாக காணப்படும் பிரதான சாலையில் வனத்துறை அதிகாரிகள் காரை பின் தொடர்வதும் காரை நிறுத்திவிட்டு கடத்தல் காரர்கள் தப்பி ஓடுவதும் வனத்துறையினர் யானை தந்தத்தை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.