செய்தியாளர்: இ.முத்துப்பாண்டியன்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலடிப்பட்டியில் கடந்த 21.06.25 அன்று நகை பாலிஷ் போடுவதாகக் கூறி, இரண்டு பைக்குகளில் வந்த வடமாநில இளைஞர்கள் ஆறு பேர், ஆலடிப்பட்டி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த வைத்திலிங்கம் என்பவரின் மனைவி ராஜபுஷ்பம் (67) என்ற வயதான பெண்ணிடம் நைசாக பேச்சுக் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவரது 16 கிராம் எடையுள்ள செயினை வாங்கிய அவர்கள் கொண்டு வந்திருந்த கெமிக்கலில் பாலிஷ் செய்தனர்.
அப்போது அங்கு வந்த மூதாட்டியின் மகன், வடமாநில இளைஞர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்து நகையை கேட்டுள்ளார். உடனே அவர்கள் நகையை திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர். இதையடுத்து அந்த செயினை எடை போட்டு பார்த்த போது, 2½ கிராம் குறைவாக இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் ஆலங்குளம் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து சிவலார்குளம் விலக்கு அருகில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு வடமாநில இளைஞர்களிடம் விசாரித்தனர். அப்போது, அவர்கள் நகை பாலிஷ் போடுவது போன்று ஆசிட்டில் போட்டு நகையின் எடையை குறைத்து மேற்படி குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், 2½ கிராம் நகை மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.