விழுப்புரம் | தொடர் திருட்டில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் கைது
செய்தியாளர்: காமராஜ்
திண்டிவனம் அருகேயுள்ள பிரம்மதேச நல்லாலம் கூட்டு சாலையில் காவல் உதவி ஆய்வாளர் சுதன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது திண்டிவனத்திலிருந்து மரக்காணம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில், கையுறை, இரும்பு ராடு, முகக் கவசம் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது,
இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் கனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி, போடிநாயக்கனூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பதும் திண்டிவனம் பிரம்மதேசம் பகுதிகளில் வீடுகளின் பூட்டினை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இருவரிடமிருந்து சிறிய அளவிலான வெள்ளி கிருஷ்ணன் சிலை, மூன்று ஜோடி கம்மல், வெள்ளி கொலுசுகள், இரண்டு கேமராக்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அழகர்சாமி மீது புதுச்சேரி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.