ஆசிரியர் ராஜமாணிக்கம்
ஆசிரியர் ராஜமாணிக்கம்  புதிய தலைமுறை
குற்றம்

"இனி தவறு செய்ய மாட்டேன் மன்னித்து விடுங்கள்" - போக்ஸோவில் கைதான ஆசிரியர் கதறல்!

PT WEB

சேலம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியொன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். 40 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ராஜமாணிக்கம் என்பவரும் ஒருவர்.

ராஜமாணிக்கம்

இந்தநிலையில் இவர் மூன்று மாணவிகளுக்குத் தனியாக டியூசன் எடுப்பதாகக் கூறி டியூசன் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மாணவிகளிடம் தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்வதாகவும் தனித்தனியாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் நடுப்பட்டி அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து சிறுவர் உதவி மையத்திலும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சிறுவர் உதவி மைய போலீசார், சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் கோபாலப்பா, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா ஆகியோர் பள்ளிக்கு சென்று நேரில் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. ஆசிரியர், மாணவிகளிடம் செல்போனில் பேசியதை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் மாணவிகள் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, “இனிமேல் தவறு செய்ய மாட்டேன், என்னை மன்னித்து விடுங்கள். புகார் கொடுக்க வேண்டாம்” எனக் கதறும் ஆடியோக்களையும் போலீசாரிடம் ஆதாரமாக எடுத்துக் கொண்டனர்.

பின்னர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ராஜமாணிக்கத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் ராஜமாணிக்கத்தை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், இவர் திருச்சி மணப்பாறை தாலுக்கா வையம்பட்டியை சேர்ந்தவர். இவரது மனைவி இவரிடமிருந்து விவாகரத்து பெற்று தன் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாகப் பள்ளி அருகே வாடகை வீட்டில் வசித்து வந்ததும், அங்கு டியூசன் எடுக்கும் பெயரில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.