பாலியல் தொல்லை: அரசுப்பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது
நெல்லையில் பள்ளி குழந்தைகளை செல்போனில் படம் பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அந்தோணிசாமி என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 9ஆம் தேதி தனது செல்போனில் பள்ளிக் குழந்தைகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரமேஷ் என்பவர் பணகுடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் பேரில் போலீசார் ஆசிரியர் அந்தோணிசாமியை கைது செய்து செல்போனை பரிசோதித்தனர். செல்போனில் ஆபாச புகைப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விசாரணை மேற்கொண்டார்.இதன்பேரில் ஆசிரியர் அந்தோனிசாமியை பணியிடை நீக்கம் செய்து தொடக்க கல்வி அலுவலர் கடந்த 12ஆம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் ஆசிரியர் மீது நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் போக்ஸோ சட்டம் பிரிவு 14 (1) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பணகுடி காவல்நிலையத்தில் இருந்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலைத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.