செய்தியாளர்: நாராயணசாமி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ் விசாரம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சுசீலா (80). இவரது மகன் சிவக்குமார் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்த நிலையில், சுசீலா தனது மருமகளுடன் சேர்ந்து மாந்தோப்பு வீட்டில் வசித்து வருகிறார். இருவரும் இணைந்து தங்களது மாந்தோப்பில் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மாலை மாந்தோப்பிற்கு மதுபோதை வந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியிடம் ரகளையில் ஈடுபட்டதோடு, பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். இதனால், அதிர்ந்துபோன மூதாட்டி தப்பிக்க முயன்று தரையில் விழுந்துள்ளார். இதையடுத்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆற்காடு நகர போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மூதாட்டியின் மருமகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆற்காடு நகர போலீசார், நந்தகுமார் என்ற அந்த 19 வயதான இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.