செய்தியாளர்: நாராயணசாமி
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொய்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜனனி என்ற பெண், காட்டு பிள்ளையார் கோயில் உண்டியலை உடைத்து பணம், வெள்ளி மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஜனனி (30) என்ற பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து அவரை அரக்கோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு கொண்டு செல்ல அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது கைதியுடன் காவலர்கள் தேன்மொழி மற்றும் பிரேமா ஆகிய இருவர் இருந்துள்ளனர். இந்நிலையில், அந்த பெண் கைதி போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை தேடும் பணியில் நகர காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்தப் பெண் கைதி, அரக்கோணம் அடுத்த ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே சுற்றித் திரிவதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற நகர காவல் துறையினர் அப்பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்தனர் இதனால் அரக்கோணத்தில் பரப்பரப்பு ஏற்பட்ட நிலையில் காவலர்கள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.