உதவி செயற்பொறியாளர் உட்பட 3 பேர் கைது  pt desk
குற்றம்

ராணிப்பேட்டை | மின் இணைப்பை மாற்றம் செய்ய லஞ்சம் - உதவி செயற்பொறியாளர் உட்பட 3 பேர் கைது

அரக்கோணத்தில் ஓட்டல் நடத்துவதற்காக வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றம் செய்வதற்கு விண்ணப்பித்த நபரிடம் லஞ்சம் பெற்ற உதவி செயற்பொறியாளர் உட்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: நாராயணசாமி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அம்மனூர், துரைசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர், அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள ஜோசப் என்பவருடைய வீட்டை வாடகைக்கு பிடித்து ஓட்டல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து வீட்டு மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

இதை அறிந்த உதவி செயற்பொறியாளர் புனிதா, தனது உதவியாளர்களை அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்குச் சென்றுள்ளார். இதையடுத்து அங்கு ஆய்வு செய்த புனிதா, இணைப்பு மாற்றித்தர ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்ட புனிதா, மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்காக சரவணனிடம் அடாவடித்தனமாக வசூலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சரவணன், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆலோசனைபடி, ஆய்வாளர் விஜயலட்சுமி, திருவள்ளூர் ஆய்வாளர் தமிழரசி தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சரவணனிடம் ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பினர். இதைத் தொடர்ந்து சரவணன், உதவி செயற்பொறியாளர் புனிதாவிடம் பணத்தைக் கொடுக்கச் சென்ற போது, அதை வணிக ஆய்வாளர் மோனிகாவிடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார்.

Arrested

இதையடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்ட மோனிகா, அந்த பணத்தை போர்மேன் பல்கிஸ் பேகத்திடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மூவரையும் கைது செய்தனர்.