செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
திருமயம் அருகே உள்ள கல்லூரில் தனிநபர் ஒருவர் அவரது வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்து வருவதாக ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலையடுத்து கல்லூரிக்குச் சென்ற போலீசார், அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் சண்முகம் (53) என்பவர் அவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கஞ்சா செடியை அங்கேயே வெட்டி அழித்த போலீசார் சண்முகத்தை கைது செய்து ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவரிடம் விசாரணை நடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.