குற்றம்

வீட்டின் மீது வெடித்த கல்குவாரி வெடி; சிறுவன் உயிரிழந்ததையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு

வீட்டின் மீது வெடித்த கல்குவாரி வெடி; சிறுவன் உயிரிழந்ததையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு

webteam

கல்குவாரி அருகே பாறைகளை உடைக்க வைக்கப்பட்டிருந்த வெடி வீட்டின் கூரையில் வெடித்த விபத்தில், வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன். அவரது மனைவி சுகன்யா. இத்தம்பதியருக்கு கன்னித்தாய் (வயது 4) என்ற மகளும், ஆகாஷ் (வயது 3) மகனும் உள்ளனர். கூலித் தொழிலாளியான முருகன் நேற்று காலையில் வேலைக்கு சென்று இருந்தார். அப்போது சிறுவன் ஆகாஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சுகன்யா தனது மகளுடன் கடைக்கு சென்று இருந்தார். அப்போது அவரது குடியிருப்புக்கு பகுதிக்கு மிக அருகில் உள்ள கல்குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வெடிக்க செய்துள்ளனர்.

அப்போது பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்ததில் அதிர்வு ஏற்பட்டு முருகனின் கான்கிரீட் வீட்டின் மேல் பகுதி இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் தூங்கி கொண்டிருந்த சிறுவன் ஆகாஷ், அதற்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் அப்பகுதியை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டு காணப்பட்டது. சிறுவன் ஆகாஷ் இறந்த விவகாரம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது இறந்த ஆகாஷின் இறப்புக்கு நீதி கேட்டு, ‘கல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இடிந்த வீட்டை கட்டி கொடுக்க வேண்டும்’ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இறந்த சிறுவனின் உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து கிராம மக்களிடம் ராதாபுரம் தாசில்தார் ஜேசுராஜன், வள்ளியூர் போலீஸ் உதவி கண்காணிப்பாளர் சமய சிங் மீனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில், “ஊருக்கு அருகில் இயங்கி வரும் இரண்டு கல்குவாரிகளை மூடப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார். இதனை தொடர்ந்து சிறுவனின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க போலீசார் காவல் பணிக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை முருகன் அளித்த புகாரில் RRM குவாரி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 A பிரிவின் கீழ் வெடி வெடித்த அடையாளம் தெரியாத நபர் என ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.