செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா வட்டாணம் அருகே உள்ள ஓடவயல் கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதையடுத்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த காணிக்கையாக வந்த பொட்டு, தாலி உள்ளிட்ட 10 பவுன் வரையிலான தங்க நகைகளை கோயிலில் பாதுகாத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஹெல்மெட் அணிந்தபடி கோயிலுக்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் பட்டப் பகலிலேயே நகைகளை திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர். இதையறிந்த ஊர் மக்கள் அவர்களை துரத்தி உள்ளனர். சிலர் உடனடியாக தொண்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த பொதுமக்களும், போலீசாரும் தொடர்ந்து திருடர்களை துரத்தி வந்த நிலையில், திருவாடானை பேருந்து நிலையத்தில் வைத்து அவர்களை பிடித்தனர். அவர்களில் ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றொருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.