அதிக நேரம் உழைத்தால் வளர்ச்சி இருக்குமா? இன்போசிஸ் கோபாலகிருஷ்ணன் சொன்ன பதில்!
“வாரத்திற்கு ஆறு நாட்கள் பணியாற்ற வேண்டும்” என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி பேசிய கருத்து குறித்து, இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் புதிய தலைமுறைக்கு பதில் அளித்துள்ளார். அதன் விவரத்தை, இங்கே காணலாம்:
கேள்வி: “அதிக நேரம் உழைத்தால் தான் நாடு வளர்ச்சி அடையும் என இன்போசிஸ் நாராயண மூர்த்தி கூறியுள்ளாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன?”
பதில்: ”அதிக நேரம் பணி புரிவது என்பது தனிப்பட்டவர்களுடைய விருப்பமாகத்தான் இருக்க முடியும். என்னைப் பொறுத்தவரை வேலை அதிகமாக பார்ப்பதை விட ஸ்மார்ட் ஆக வேலை பார்க்க வேண்டும். நம்மால் முடிந்த அறிவை, திறனை நிறுவனத்திற்கு எப்போதும் வழங்கலாம். நிறுவனத்தை மேம்படுத்த நாட்டை மேம்படுத்த நம்மை மேம்படுத்த... ஈடுபாட்டோடு பணிபுரிந்தால் போதும். போட்டி மிகுந்த உலகில் நம்மை எப்படி முன்னிலைப்படுத்த வேண்டும் என அறிவது என்பது அவசியம். அதற்கு தீவிர பயிற்சியும் அவசியம் அல்லவா...?
இந்தியாவில் ஐடி நிறுவனங்களுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. முதலீடு செய்வதற்கான நிலை உள்ளது. வாய்ப்புகள் பெருகியுள்ளன. 1,800 சர்வதேச திறன் மையங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் இனி ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.
திறன் மிகுந்த மாணவர்கள் இங்கு அதிகம் இருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் இந்த கல்வி முறையின் தயாரிப்புகள்தானே. கல்வியில் அனைத்து இடங்களிலும் உள்ளடங்கிய வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் திறன் கொடுப்பது சவாலான காரியம். தரமான கல்வி அனைவருக்கும் கொடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும்.
தற்போது இந்தியாவில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் வளர்ச்சி பலவிதமாக உள்ளது. ஒரு மேம்பாட்டு திட்டத்தை இந்தியா உலகிற்கு அறிமுகப்படுத்தலாம். நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இங்குதான் நமது அறிவை பயன்படுத்த வேண்டும்.
மன அழுத்தங்களை குறைத்துக் கொள்ள தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். அழுத்தம் என்பது அனைவருக்கும் இருக்கிறது. மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகி வருகிறது. அது உடல்நலனை பாதிக்கிறது என்பதால் அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்பதைத்தான் சிந்திக்க வேண்டுமே தவிர, வேலை நேரம் பற்றியல்ல” என்றார்.