சிசிடிவி-யில் சிக்கிய நபர் கைது pt desk
குற்றம்

தேனி: ATMல் பணம் எடுக்கத் தெரியாதவர்களை குறிவைத்து நூதன திருட்டு... CCTV-ல் சிக்கிய நபர் கைது!

பட்டன் செல்போன் வைத்திருப்பவர்களை குறிவைத்து ஏடிஎம் கார்டை மாற்றி நூாதன திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: அருளானந்தம்

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (50). இவர், கடந்த மாத இறுதியில் இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கத் தெரியாத நிலையில், அருகே இருந்த நபரிடம் 1,000 ரூபாய் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த நபரும் 1,000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார்.

ATM

இந்நிலையில், அடுத்து நான்கு நாட்களில் முனியாண்டியின் வங்கிக் கணக்கில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் யாராலோ எடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து முனியாண்டி வங்கிக் கிளையில் புகார் செய்ததோடு பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியன் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள போடேந்திரபுரத்தைச் சேர்ந்த அழகுராஜா என்ற இளைஞர் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. அழகு ராஜாவை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அதிர்ச்சியூட்டும் பல தகவல் வெளியானது. அதன்படி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கத் தெரியாத, படிக்காத நபர்கள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து பணம் எடுத்து தரக் கூறும் நபர்களிடம் ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுத்துக் கொடுத்துவிட்டு அவர் ஏற்கனவே கையில் வைத்துள்ள வேறொரு ஏடிஎம் கார்டை கொடுப்பாராம்.

Police station

பின் தான் வைத்திருந்த உண்மையான ஏடிஎம் கார்டை வைத்து, நான்கு நாட்களில் அந்த வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்த பெரியகுளம் காவல்துறையினர், அழகுராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.