கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது pt desk
குற்றம்

நீலகிரி | காட்டு மாட்டை வேட்டையாடியதாக கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது

உதகை அருகே காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதாக கேரளாவைச் சேர்ந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: ஜான்சன்

உதகை தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லக்கொரை கிராமத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் கேரள பதிவெண் கொண்ட கார் சுற்றி வருவதாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனச்சரக பணியாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வனப் பணியாளர்கள் செல்வதற்கு முன் காருடன் இரண்டு பேர் தப்பிச் சென்று விட்டனர்.

இந்நிலையில், அப்பகுதியில் ஆய்வு செய்த போது, சுமார் 10 வயது மதிக்கத் தக்க காட்டுமாடு ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சோதனைச் சாவடிகளுக்கு தகவல் பகிரப்பட்டது. இதையடுத்து நடுவட்டம் பேருந்து நிலையம் அருகில் கார் வந்து கொண்டிருந்த போது, வனத் துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணைக்காக உதகை அழைத்து வந்தனர்.

மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்படி முதுமலை புலிகள் காப்பக மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்டு மாட்டை பிரேத பரிசோதனை செய்தார். இதில், துப்பாக்கியால் காட்டுமாடு சுடப்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கேரளவைச் சேர்ந்த அனீஷ் மோன் (43), நிஷார், ஆகியோரை வனத் துறையினர் கைது செய்தனர்.