தந்தை கொலை pt desk
குற்றம்

நெல்லை | கல்லூரிக்குச் செல்லுமாறு அறிவுறுத்திய தந்தையை கொலை செய்த மகன்!

நெல்லையில் கல்லூரிக்குச் செல்லுமாறு அறிவுறுத்திய தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: மருதுபாண்டி

நெல்லை மேலப்பாளையம் மேல கருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (44). இவரது மகன் தங்கபாண்டி (19). இந்நிலையில், கூலித் தொழிலாளியான மாரியப்பன் தனது மகன் தங்கபாண்டியை கஷ்டப்பட்டு கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக தங்கபாண்டி கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மாரியப்பன் மகனிடம் கல்லூரிக்கு சென்றால் தான் படித்து முன்னேற முடியும் என்று அடிக்கடி அறிவுறுத்தி வந்துள்ளார்.

இதனால் தந்தை மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து இன்று அதிகாலையில் திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த தங்கபாண்டியன் வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த பெரிய கல்லை எடுத்து வந்து தந்தை மாரியப்பனின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மேலப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி மேலப்பாளையம் பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித் திரிந்த தங்கப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.