ஆவடி| மாடியிலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்த சிறுவன்.. வீட்டு உரிமையாளர் மீது பெற்றோர் சந்தேகம்!
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை ஆவடி ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் - எமிலியம்மாள் தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த கார்த்திக், தனது தாயுடன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது சிறுவன் கார்த்திக் இரண்டாவது மாடியில் விளையாடி கொண்டிருந்தார். அங்கு மரத்தில் சிக்கியிருந்த காற்றாடியை கார்த்திக் எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென மாடியில் இருந்து கார்த்திக் கீழே தவறி விழுந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆவடி போலீசார், கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம்..
போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், சிறுவன் கார்த்திக் காத்தாடி பிடிக்க முயன்றபோது தவறி விழுந்து பலி ஆகிவிட்டதாக கூறப்பட்டதை அவருடைய தாய் மறுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் தாய் கூறுகையில், தனது மகன் கார்த்திக் வீட்டின் வெளியே சைக்கிள் ஓட்டி கொண்டு உறவினர் சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்பொழுது அந்த வீட்டின் உரிமையாளர் லிவிங்ஸ்டன் என்பவர் சிறுவர்களை மாடியில் உள்ள தென்ன கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் வேலை செய்ய அழைத்து சென்றுள்ளார். மகன் கார்த்திக்குடன் சென்ற சிறுவர்கள் அங்கிருந்து வந்து விடவே கார்த்திக் மட்டும் வேலை செய்து கொண்டிருந்த போது மர்மமான முறையில் திடீரென கீழே விழுந்து விட்டதாக கூறினார்.
தனது மகன் உயிரிழப்பில் மர்மம் உள்ளது. இது பற்றி வீட்டின் உரிமையாளரிடம் கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக பேசி தற்போது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். இது தங்களுக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இது பற்றி ஆவடி போலீஸில் புகார் அளித்துள்ளோம்,கா வல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.