Kasi pt desk
குற்றம்

நாகர்கோவில் | பாலியல் வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற காசி.. மற்றொரு வழக்கில் 3 ஆண்டு சிறை!

நாகர்கோவிலில் பாலியல் வழக்கில், வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை பெற்றுள்ள காசி மீது நிலுவையில் உள்ள கந்து வட்டி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: நவ்பல் அஹமது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவர் மீது கடந்த 2020ம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பெண்கள் காசி மீது புகார் கொடுத்தனர்.

இந்த வழக்கில் தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் மற்றும் காசிக்கு உதவியதாக அவரது நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இது தவிர காசி மீது கந்து வட்டி கேட்டு மிரட்டல் உள்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Court

பாலியல் புகார் தொடர்பான வழக்கை விசாரித்த நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் காசியை சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும் எனவும், ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், நாகர்கோவில் அலெக்சாண்டரா பிரஸ் ரோட்டைச் சேர்ந்த டிராவிட் என்பவர் காசியிடம் வாங்கிய ரூ.2 லட்சம் கடனுக்காக 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் மற்றும் தொகை எழுதாத காசோலை ஒன்றையும் கொடுத்திருந்தார். வட்டியுடன் கடன் தொகையை செலுத்திய பிறகும் கூடுதல் பணம் கேட்டு மிரட்டிய காசி பைக் மற்றும் தொகை எழுதாத காசோலையை திரும்ப கொடுக்காமல் இருந்து வந்தார்.

இது குறித்த புகாரின் பேரிலும் காசி மீது கந்து வட்டி சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதில் காசியின் தந்தை தங்கப்பாண்டியன் மற்றும் புரோக்கர் நாராயணன் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 3ல் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காசிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 4000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் தங்க பாண்டியனுக்கு இரண்டு ஆண்டுகளும், புரோக்கர் நாராயணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.