கைதானவர்கள்
கைதானவர்கள் புதியதலைமுறை
குற்றம்

இன்ஸ்டாகிராமில் பெண் போல பேசி ஏமாற்றிய சிறுவன்.. கத்திக்குத்தில் முடிந்த கைகலப்பு..

PT WEB

திருப்பூர் மாவட்டம் வாஷிங்டன் பகுதியை சேர்ந்தவர் கோபி (24). இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவா (24) உட்பட 5 பேருடன் சேர்ந்து, கள்ளுமடை குட்டை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இவர்களின் நண்பர்களான திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்துள்ள ஈட்டிவீரம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராம் (22), பாஸ்கரன் (22) மற்றும் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் ஆகிய மூவரும் அங்கு வந்து மது அருந்தியுள்ளனர்.

முன்னதாக கோபியின் வேறொரு நண்பரான வசந்தகுமார் என்பவருக்கு, அவர்களோடு மது அருந்திக் கொண்டிருந்த 18 வயது இளைஞர் கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் போலியாக பெண் போன்ற முகவரியில் இருந்து பேசி துன்புறுத்தி வந்தது குறித்து தெரியவந்தது.

இதனால் வசந்தகுமார் அவரது மற்றொரு நண்பரான ஜெகதீஸ் என்பவருடன் சேர்ந்து புத்தாண்டிற்கு முந்தய நாளேவும் 18 வயது சிறுவனை கன்னத்தில் அறைந்துள்ளனர். இது குறித்து சிறுவனும், அவருடன் வந்த ஜெயராம் மற்றும் பாஸ்கரும், கோபி, சிவா மற்றும் அவர்களின் நண்பர்களிடம் புத்தாண்டு தினத்தன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு ‘போலி இன்ஸ்டாகிராம் முகவரியில் பெண் போல பேசி துன்புறுத்தினால், அப்படித்தான் அடிப்போம்’ என கோபி மற்றும் நண்பர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயராம், ‘அதற்குதான் கொலை செய்ய வந்துள்ளோம்’ என சொல்லிக்கொண்டே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபியின் இடது மார்புக்கு மேல் குத்தியுள்ளார். இதற்கிடையே கோபியின் நண்பரான பாஸ்கர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவா என்பவரின் முதுகிலும், சிறுவனின் தோள்பட்டையிலும் குத்தியுள்ளனர். இதனால், வலி தாங்க முடியாமல் அவர்கள் கூச்சலிட்டதை அடுத்து 18 வயது சிறுவன் உட்பட மூவரும் தப்பியோடியுள்ளனர்.

காயம்பட்ட கோபி மற்றும் சிவாவை அவர்களது நண்பர்கள் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவியளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து, ஜெயராம், பாஸ்கர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், 18 வயது சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். அவர்களிடமிருந்து கத்திகளையும் பறிமுதல் செய்தனர். போலி இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக பெண் போல பேசி நண்பனை துன்புறுத்திய விவகாரம் கைகலப்பாகி, கத்திக்குத்தில் முடிந்து மூவர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.