செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் செயல்பட்டு வரும் கடையில் பணியாற்றி வருபவர் மோகன் ராஜ். இந்நிலையில், இன்று அதிகாலை வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டிய இரு மர்ம நபர்கள் அவரிடமிருந்து பணம், செல்போன் மற்றும் வெள்ளி செயின் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து ரயில்வே இருப்பு பாதை போலீசாரிடம் தகவல் தெரிவித்ததன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவம் நடைபெற்று இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், அவர்கள் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (எ) வினோத்குமார் (45) மற்றும் வினோத் (எ) சித்தன் (36) என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இருவரையும் இருப்பு பாதை போலீசார் தேடி பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், பணம், வெள்ளி செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.