செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூடகோவில் பாறைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசாமி. முன்னாள் ராணுவ வீரரரான இவர், அப்பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மணிகண்டன் என்பவருடன் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இதையடுத்து இன்று காலை மாரிசாமிக்கும் மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றி இருவருக்கும் கைகலப்பான நிலையில், மாரிசாமி கையில் வைத்திருந்த துப்பாக்கியால் மணிகண்டனை மிரட்டியுள்ளார். அப்போது மணிகண்டனின் சகோதரர் உதயகுமார் இருவரது சண்டையையும் விலக்கிவிடச் சென்றுள்ளார். இதில் மாரிசாமி துப்பாக்கியால் சுட்டதில், உதயகுமாரின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது; மேலும் சரமாரியாக மாரிசாமி சுட்டபோது அருகில் விளையாடிக் கொண்டிருந்த கிஷோர் என்ற பள்ளி மாணவனும் தோள்பட்டையில் லேசான காயம் அடைந்தார
இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உதயகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பள்ளி மாணவன் லேசான காயத்துடன் தப்பித்தார். இது குறித்து கூடகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாரிசாமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.