TTF வாசன்
TTF வாசன் புதிய தலைமுறை
குற்றம்

யூடியூபர் TTF வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்

ஜெனிட்டா ரோஸ்லின்

காஞ்சிபுரம் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட TTF வாசன் விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் தமிழக போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்திருந்தது.

இதன் அடிப்படையில் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டு, பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 6 பிரிவுகளுக்கும் மேல் அவர்மீது காஞ்சிபுரம் பாலுசெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அம்மனுவானது பல்வேறு காரணங்களை காட்டி நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-ஆவது முறையாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார் .

ttf vasan

நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் இவ்வழக்கானது விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இவ்வழக்கு விசாரணையில் காவல்துறையும் யூடியூபர் TTF வாசனனின் ஜாமீனுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். TTF வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் வாகனம் இயக்க இயலாத சூழ்நிலையை் காரணம் காட்டி நிபந்தனை ஜாமீனானது வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் அடுத்த 3 வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டிருக்கிறது.