குழந்தை திருமணம் முகநூல்
குற்றம்

கிருஷ்ணகிரி | சிறுமியை திருமணம் செய்து வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற நபர் உட்பட 3 பேர் கைது

ஓசூர் அருகே சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்து, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின் செயல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் சிறுமியின் தாய் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே ஒன்னேபுரம், சித்தப்பனூர், சிக்கமஞ்சி, கிரியானூர், பெல்லட்டி, தொட்டமஞ்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 -ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால், அதற்கு மேல் படிக்க அஞ்செட்டிக்கு செல்ல வேண்டும். இதனால் பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு தயங்கி 10-ம் வகுப்புக்கு மேல் படிக்க அனுப்புவதில்லை.

Arrested

இதையடுத்து பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் அந்த மலை கிராமத்தில் குழந்தை திருமணம் அதிகரிப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள மலை கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு வரை படித்த 14 வயது சிறுமியின் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். இதையடுத்து அந்த சிறுமிக்கும், காலிகுட்டை பகுதியை சேர்ந்த மாதேஸ் (30) என்பவருக்கும் கடந்த 3-ம் தேதி பெங்களூருவில் திருணம் நடந்தது.

இன்று அந்த சிறுமியை, மலை கிராமத்தில் உள்ள அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால், அந்த சிறுமி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். ஆனால், உறவினர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக தோளில் தூக்கிச் சென்று கணவர் வீட்டில் மீண்டும் விட்டுள்ளனர். .அப்போது அந்த சிறுமி கதறி அழுததை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்ளில் வெளியிட்டுள்ளனர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து சிறுமியின் பாட்டி அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு, சிறுமி மற்றும் சிறுமியை திருமணம் செய்த மாதேஸ் ஆகியோரை தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற காலிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ், அவரது சகோதரர் மல்லேஷ் மற்றும் சிறுமியின் தாயார் நாகம்மா ஆகியோரை கைது செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.