செய்தியாளர்: ஜி.பழனிவேல்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஹேல். இவருக்கு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுமையா என்பவருக்கும் கடந்த 16ஆம் தேதி கிருஷ்ணகிரி அருகே ஒரப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த சேலத்தைச் சேர்ந்த சர்புதின் மனைவி கதிஜா மண்டபத்தில் உள்ள அறையில் உள்ள பீரோவில் 21 சவரன் தங்க நகைகளை வைத்துள்ளார். இதையடுத்து மறுநாள் பார்த்தபோது பீரோவில் இருந்த 21 பவுன் தங்க நகைகள் காணாமல் போயின.
இது தொடர்பாக பர்கூர் காவல் நிலையத்தில் கதிஜா புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மண்டபத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை இரண்டு இளைஞர்கள் மண்டபத்திற்கு வந்து நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. சுற்றியுள்ள செல்போன் சிக்னல் மூலம் விசாரணை நடத்தியதில் சேலத்தைச் சேர்ந்த கிஷோர் என்பவர் கதிஜாவுடன் தங்கியிருந்த உறவுமுறை பெண்ணான ஷீபா அடிக்கடி போன் செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கிஷோரின் காதலி என தெரியவந்தது. காதலனுக்கு உதவ காதலி திட்டமிட்டு மண்டபத்தில் இருந்த நகையை திருடி காதலனை மண்டபத்திற்கு வரவழைத்து கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஷீபா அவரது காதலன் கிஷோர் கிஷோரின் தந்தை மகேந்திரன் மற்றும் சக்திவேல் என நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கிஷோருடன் இணைந்து திருமண மண்டபத்திற்கு வந்து நகை வாங்கிக் சென்ற ஜோதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.