10 பேர் கைது pt desk
குற்றம்

கிருஷ்ணகிரி | விலையுயர்ந்த புதையல் இருப்பதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி – 10 பேர் கைது

ஓசூர் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி 8 லட்சம் ரூபாயை ஏமாற்றிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாந்தபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்தவர்கள் ராதம்மா (46) - குள்ளப்பா தம்பதியர். ராதம்மா அப்பகுதியில் கால்நடைகளை வளர்த்தும், பால் விற்பனை செய்து வரும் நிலையில், இவருக்குச் சொந்தமான நிலத்தில் ஆஞ்சநேயர் கோயிலை பராமரித்து வருகிறார். இதையடுத்து அஞ்சநேயர் கோயிலை சுற்றிப் பார்த்த ஒரு கும்பல், ராதம்மாவிற்கு கடவுள் அனுகிரகம் உள்ளது. எனவே வீட்டின் அருகே புதையல் உள்ளதாகக் கூறி சிறு பூஜை நடத்தி ஒரு சிறிய பானையில் இருந்து இரண்டு தங்க காசுகளை எடுத்து கொடுத்துள்ளனர்.

இதையடுத்து தங்க காசுகளை சரி பார்த்து அது தங்கம் என்று தெரிந்தவுடன் மகிழ்ச்சி அடைந்த தம்பதியரிடம், உண்மையான புதையல் பூமியின் அடியில் தான் உள்ளது அது பெரிய புதையல். அதற்கான பூஜை செலவிற்கு ரூ.4 லட்சம் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ,4 லட்சம் என மொத்தமாக ரூ.8 லட்சத்தை ராதம்மாவிடம் வாங்கி உள்ளனர். இதனையடுத்து ராதம்மா வீட்டின் அருகே கடந்த 23-ம் தேதி பூஜை செய்து பூஜை மறைத்து வைத்திருந்த பானையை எடுத்துக் கொடுத்துள்ளனர். இந்த புதையல் இருக்கும் மண்பனைக்கு தினமும் பூஜை செய்து வர வேண்டும் எனக் கூறி, பூஜை முடிவதற்குள் இதை திறந்து பார்த்தால் ரத்த வாந்தி எடுத்து இறந்து விடுவார்கள் என பயத்தை ஏற்படுத்தி உள்ளனர்,

புதையல் இருந்தது என தெரிந்தால் அரசு அதிகாரிகள் எடுத்துச் சென்று விடுவார்கள் இதை யாரிடமும் கூறி விடாதீர்கள் என ராதமாவிடம் கூறிவிட்டு இந்த புதையலை வாங்குவதற்கு ஒருவர் ரூ.2.50 கோடி அட்வான்ஸ் எடுத்து வந்துள்ளார். அட்வான்ஸ் பணப் பெட்டியையும், புதையல் உள்ள பனையையும் பூஜைகள் முடிந்த பின் ஒரே நேரத்தில் திறக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதை நம்பிய ராதம்மாக தொடர்ச்சியாக தினமும் பூஜை செய்து வந்துள்ளனர். சில நாட்கள் கழித்து மேலும் எங்களுக்கு பணம் தேவை என ராதமாவிடம் அந்த கும்பல் கேட்டுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த ராதம்மாவின் மகன், புதையல் இருப்பதாக கூறிய மண்பானை மற்றும் பணம் இருப்பாதக் கூறிய பெட்டி ஆகியவற்றை உடைத்துப் பார்த்துள்ளார். அப்போது அதில் ஒன்றும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், புதையல் எடுக்கும் கும்பல் வந்து சென்ற கார் ஓட்டுநர் சந்தேகமடைந்த நிலையில், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி மூலமாக நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் போலீஸார் ஓசூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த திருப்பூர் சசிக்குமார் (62), சங்கர்கணேஷ் (43), செல்வராஜ் (61), பழனியைச் சேர்ந்த பிரபாகர் (37), உடுமலைப்பேட்டை சசிகுமார் (48), சேலம் ராஜ்குமார் (45), விருதாசலம் நடராஜன் (48), முத்துகுமரவேல் (48), விஜயவாடா பிரகாஷ்குப்தா (68) பெங்களூரு லட்சுமி காந்த் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பெண்களை தேடி வருகின்றனர்.