செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனூர் அரசு கல்லூரியில் எம்.எஸ்.சி பயின்று வந்தவர் மாணவி ஷிபா (24). இவர் கல்லூரிக்கு லிங்கசுகூரில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பேருந்தில் பயணம் செய்து நபர், மாணவியிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி அந்த நபருடன் சென்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த நபர் திடீரென ஷிபாவின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில், பலத்த காயமடைந்த அந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அப்பகுதியினர், லிங்கசுகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மாணவியை கொலை செய்தவர், தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் முபீன் என்பதும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அறிமுகமாகி, இருவரும் காதலித்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது பெண் வீட்டில் தெரிய வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷிபாவிற்கு வேறு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதை ஏற்க முடியாத முபின் மாணவியிடம் பேச வேண்டும் என்று தனியாக அழைத்துச் சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுதியுள்ளார். இதற்கு மாணவி மறுத்த நிலையில், மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது