செய்தியாளர்: மனு
கன்னியாகுமரி மாவட்டம் மங்கலகுன்று பகுதியைச் சேர்ந்தவர் சஜூ ராஜ். இவர், கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் திப்பிரமலை பகுதியைச் சேர்ந்த மணி டேவிட் என்பவரது மனைவி பெமிலா (40) பணியாற்றி வந்தார். இவரிடம் நிதி நிறுவன உரிமையாளர் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது லாக்கரில் இருந்து சில நகைகளை அவர் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் தனது ஆண் நண்பரான விஜின் என்பவரோடு இணைந்து லாக்கரில் இருந்து திருடி வேறு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து 37 லட்சத்து 18 ஆயிரம் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டார். இது குறித்து நிதி நிறுவன உரிமையாளர் கருங்கல் காவல் நிலையத்தில் பெமிலா, விஜின் உட்பட நான்கு பேர் மீது புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து தலைமறைவான நான்கு பேரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், நான்கு மாதங்களாக காரைக்காலில் தனது ஆண் நண்பர் விஜினுடன் விடுதியில் தலைமறைவாக இருந்த இருவரை கைது செய்து கருங்கல் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.