செய்தியாளர்: நவ்பல் அஹமது
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே காரவிளையைச் சேர்ந்தவர் எல்.ஐ.சி. ஏஜெண்ட் நற்சீசன். இவர், தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், தனது 86 வயது தாயாரை கவனித்துக் கொள்வதற்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர், நற்சீசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், குடும்பத்துடன் மாப்பிள்ளை பார்க்கவருவதாகவும் கூறியுள்ளனர். அதன்படி மதுரையைச் சேர்ந்த நான்கு பெண்கள் வந்துள்ளனர். அப்போது நற்சீசன் வீட்டில் திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகளை அவர்களிடம் காண்பித்து விட்டு மேஜை டிராயரில் வைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து 2 நாட்கள் கழித்து பார்த்தபோது மேஜை டிராயரில் வைத்திருந்த 8 சவரன் நகைகள் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மாப்பிள்ளை பார்க்க வந்த நபர்களை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர்களுடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த நற்சீசன், ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நகையை திருடிச் சென்றது. மதுரை கும்பல்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரையைச் சேர்ந்த முருகேஸ்வரி, கார்த்திகாயினி. முத்துலட்சுமி. போதும்பொண்ணு ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.