செய்தியாளர்: சுப்ரமணியம்
கோபிசெட்டிபாளையம் அருகே நாகர்பாளையம் கீரிப்பள்ளத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்லால். விவசாயியான இவர், தனது தோட்டத்தில் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன்லாலின் தோட்டத்தில் இருந்த சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டு விவசாயி மோகன்லால் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் வெளியே சென்று பார்த்துள்ளார் அப்போது தோட்டத்தில் மோகன்லாலை நோக்கி அரிவாளுடன் ஒருவர் ஓடி வருவதைக் கண்டு தனது கையில் இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். இதில், நபரின் மார்பில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கோபி காவல்துறையினர், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த நபர் மொடச்சூர் செங்கோட்டையன் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பதும் அவர் சுமை தூக்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து தந்தை கண்ணனை தேடி வந்ததாக கூறிய மகன்கள் மூர்த்தி, விஜய் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து விவசாயி மோகன்லாலிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.