VAO கைது pt desk
குற்றம்

திண்டுக்கல் | பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய விஏஓ கைது

திண்டுக்கல் அருகே பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: ரமேஷ்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பண்ணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மகேஸ்வரன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டா மாறுதல் செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்த பின்பு கிராம நிர்வாக அலுவலரை அணுகியுள்ளார். அப்போது விஏஓ, பட்டா மாறுதல் செய்வதற்கு மூவாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

Arrested

இதையடுத்து, லஞ்சம் தர விரும்பாத விவசாயி மகேஸ்வரன் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ரசாயன பவுடர் தடவிய 2500 ரூபாய் நோட்டுக்களை விவசாயி மகேஸ்வரனிடம் கொடுத்து அனுப்பினர். இதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்ற மகேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலரிடம் பணத்தைக் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிலுவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜக்கரியா என்பவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.