ராஜபாளையம் | வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 13 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்
செய்தியாளர்: K.கருப்பஞானியார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கூரை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி காசியம்மாள் (85). இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிசியோதெரபி பயிற்சி அளிப்பதற்காக உங்கள் மகன் அனுப்பியதாக கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி அவரை வீட்டுக்குள் அனுமதித்துள்ளார்.
அப்போது பிசியோதெரபி பயிற்சியின் போது, இடையூறாக இருக்கும் என மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கழற்றி வைக்குமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய மூதாட்டி தான் அணிந்திருந்த 13 சவரன் தங்க நகைகளை கழற்றி வைத்துள்ளார். இந்நிலையில், மூதாட்டி அசந்த போது, கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர் நகைகளை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து மூதாட்டியின் மகன் ஜெயக்குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில், கைரேகை நிபுணர்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் திருடனை தேடி வருகின்றனர். இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.