செய்தியாளர்: சுதீஷ்
கோவையில் இருந்து கேரள மாநிலம் செல்லும் பாலக்காடு சாலையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறி வைத்து அதிக அளவில் போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் நாள்தோறும் சிக்கி வருகின்றனர். இருந்த போதும் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து நேற்று கோவை, சுகுணாபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்பொழுது மைதானத்தில் மறைத்து வைத்து இருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை கைப்பற்றி காவல் துறை நடத்திய விசாரணையில், அருகில் குடியிருந்து எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மிருத்யுஞ்சயரனா, கோவை உடையாம்பாளையம் பகுதியில் சேர்ந்த ஜான் பெட்டர், போத்தனூர் கணேசா புரத்தைச் சேர்ந்த முத்து ஆகிய நான்கு பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.