குற்றம்

சூர்யாவை உதைப்பவருக்கு பரிசுத்தொகை என அறிவித்தவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

நிவேதா ஜெகராஜா

நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் என மிரட்டல் விடுத்த பாமக மாவட்ட செயலாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி மற்றும் நிர்வாகிகள் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில், "இருளர் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட கொடுமைகளை திரைப்படம் மூலம் உலகத்திற்கும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் படம் ‘ஜெய்பீம்’. இந்த படத்தை தயாரித்து, நடித்துள்ளார் நடிகர் சூர்யா. பாமக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, ‘நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். இனி சூர்யா தரை வழியாக எங்கும் பயணம் செய்ய முடியாது, வான் வழியாக தான் செல்ல முடியும்’ என்றும் மிரட்டியுள்ளார்.

இக்கருத்து சமூக பதட்டத்தையும், வன்முறையையும், சாதிய மோதலையும், இளைஞர்கள் மத்தியில் சாதிய வன்மத்தை விதைக்கும் வகையிலும், திட்டமிட்டு உள் நோக்கத்துடன் பேசியுள்ளார். தமிழ் நாட்டில் வன்முறையை தூண்டும் விதமாகவும், சாதிய மோதலை தூண்டும் விதமாகவும் பேசிய, பாமக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தங்கள் சமூகத்தினர் மீது அவதூறு பரப்பும் வகையில் ஜெய்பீம் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் சூர்யா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் குடியாத்தம் காவல்நிலையத்தில் வன்னியர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.