செய்தியாளர்: சுதீஷ்
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜ கணேஷ் என்பவரை செல்வபுரம் போலீசார் கைது செய்து உள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர், வேடப்பட்டியில் உள்ள ஹரிஸ்ரீ கார்டன் பகுதியில் ரூ.50 லட்சத்திற்கு ஒரு வீட்டுமனையை வாங்கி உள்ளார். இந்த சொத்தை போலீசார் தற்போது முடக்கி உள்ளனர். அதேபோல் அவரது வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக இருந்த ரூ.46 லட்சத்தை முடக்குமாறு வங்கிக்கு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜ கணேஷிடம் காவல் துறை நடத்திய விசாரணையில், சூதாட்டத்திற்கான ஒரு செயலியின் உள்நுழைவு விவரங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த உள்நுழைவை பயன்படுத்தி, மற்றவர்களிடம் பணத்தை பெற்று அதை மெய் நிகர் நாணயங்களாக (virtual coins) மாற்றி கொடுத்துள்ளார். சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு கமிஷன் தொகையை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள பணத்தை கொடுத்து வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செல்வபுரம் காவல் துறையினர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்து செல்வபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.