குற்றம்

கோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

கோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

kaleelrahman

ஈமுகோழி மோசடி வழக்கு - 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை, ரூ.56 லட்சம் அபராதம் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சிறப்பு நல நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் ஈமுகோழி மோசடியில் ஈடுபட்ட நிறுவன இயக்குனர்கள் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.56 லட்சம் அபராதம் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சிறப்பு நல நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவிட்டது.

கோவை கிணத்துக்கடவில் ஜே.பி.ஆர்., ஈமு அக்ரி பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்ற பெயரில் சுல்தான்பேட்டையைச் சேர்ந்த பத்மநாபன், கிணத்துக்கடவைச் சேர்ந்த ஜெயகுமார், வடவள்ளியைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் சூலூரைச் சேர்ந்த அரவிந்த்குமார் ஆகிய 4 பேர் இணைந்து ஈமுகோழி விற்பனை தொழிலை துவங்கினர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம், 2 கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து விளம்பரப்படுத்தியது. ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், 6 ஈமுகோழி குஞ்சுகள், அதற்கான கொட்டகை, மாத பராமரிப்பு தொகை ரூ.6500, ஆண்டுக்கு 15,000 போனஸ், 2 ஆண்டுகளில் முதலீடு செய்த தொகை திருப்பி அளிக்கப்பட்டு, குஞ்சுகள் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும்.

மற்றும் ஈமுகோழி குஞ்சுகள் இல்லாமல் இதேபோல் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.7000 , ஆண்டுக்கு 20,000 போனஸ், 2 ஆண்டுகளில் முதலீட்டு தொகை திருப்பி அளிக்கப்படும் என இரு திட்டங்கள் அறிவித்தது.


இந்த இருதிட்டங்களையும் நம்பி கோவையை சேர்ந்த பலர் முதலீடு செய்தனர். ஆனால், கூறியபடி சலுகை தொகையை அளிக்காததால், 2014ஆம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 78 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1 கோடியே 67 லட்சத்து 49 ஆயிரம் பணம் மோசடி செய்ததாக டான்பிட் சட்டம் 5, மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நிறுவனத்தின் இயக்குனர்களான 4 பேரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு, கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டது. பொருளாதார குற்றங்களில் தமிழகத்தையே உலுக்கிய இந்த ஈமுகோழி மோசடி வழக்கில் குற்றச்சாட்டப் பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் மாணிக்கராஜ் வாதாடினார். வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட, பத்மநாபன், ஜெயகுமார், ராஜசேகர் ஆகிய 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.56 லட்சம் அபராதம் விதித்து டான்பிட் சிறப்பு நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நீதிமன்றத்தில் ஆஜாராகாத குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயகுமாரை கைது செய்து சிறையில் அடைக்க வாரண்ட் பிறப்பிக்கப் பட்டதுடன், வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த்குமாரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவையில் பதிவு செய்யப்பட்ட ஈமுகோழி வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட முதல் வழக்கு என்பதுடன், 10 ஆண்டுகள் அதிகபட்சமாக தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.

நீதிபதி இல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக தீர்ப்புகள் வழங்கப்படாமல் வழக்குகள் டான்பிட் நீதிமன்றத்தில் தேங்கியிருந்த நிலையில், சிறப்பு நீதிபதியும், அரசுத்தரப்பு வழக்கறிஞரும் நியமிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு வருகிறது.